4 Jun 2018

நீலவானமும் சங்கு புஷ்பமும்

சங்கு புஷ்பம்சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறதுதமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள்
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருவிளை மலர்தான் இது! கருவிளை-நீலநிறச் சங்குப்பூ.
செருவிளை- வெள்ளை நிறச் சங்குப்பூ.
ஏழு ண்ணங்களில் ஒன்று நீலம்! ஐந்து வண்ணங்களை ஒன்றாய்க் காணும் போது இதனைக் கருமை எனக் கொள்வர்! எனவே இது கரிய விளைப் பூ
இதனை, “ மணிப்பூங் கருவிளைஎன்கிறது குறிஞ்சிப் பாட்டு.

இந்த சங்குப் பூவை அழகாக பல வடிவங்களில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பது எனது பொழுது போக்கு!   எங்கள்  தோட்டத்தில் ஒரு நாள் பூத்துக் குலுங்கிய சங்குப் பூக்களை சேமித்த போது என் மகளின் கண்களுக்கு மயிலின் வடிவம் மனதில் தோன்றிவிட்டது! என்ன ஆச்சர்யம் சிறிது நேரத்தில் மயிலொன்று அங்கே தோகை விரிய அமர்ந்திருந்தது!@Neelavanam

மலர் கொண்டு இறைவனை ஆராதிப்பது தொன்று தொட்டு தொடர்கின்ற
வழக்கமாகும். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு வில்வம், என ஆராய்ந்து ,உணர்ந்து  மலர்களால் ஆராதனை செய்கிறார்கள்.

அதே போல் புதுச்சேரி அன்னை மலர்களைப் பற்றியும், அவற்றின் குணங்களையும், அந்தந்த மலர்களால் வழிபடும் போது கிடைக்கக் கூடிய பலன்களைப் பற்றியும் விரிவாகக் கூறியிருக்கிறார். அந்தப் பட்டியலில் சங்குப் பூவுக்குராதையின் பிரார்த்தனைஎன்ற அழகிய பெயரை அளித்திருக்கிறார்

பக்தி இலக்கியத்தில் கண்ணனும், ராதையும் இணை பிரியாதவர்கள். அத்தனை கோபியரின் பக்திக்கெல்லாம் மேலே ராதை பல மடங்கு உயர்ந்தவள் ! ஏனென்றால் அவளுடைய அன்பு அத்தனை தூய்மையானது!
பரிபூரண சரணாகதி தத்துவத்தின் உதாரணமாகத் திகழ்பவள் ராதை!
அதை உணர்த்தும் வகையில் ஒரு அழகிய கதை உண்டு
ஒரு முறை கண்ணபிரானிடம் நாரதர் , ‘ பிரபோ நீங்கள் எல்லோரையும்விட இராதைக்குத் தனியிடம் கொடுத்திருப்பதன்  காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்,’ என்றார்.

அதற்குக் கண்ணன், நாரதரே நீங்கள் மூவுலகமும் சென்று , “கண்ணன்
தலைவலியால் வருந்துகிறான்! அதைத் தீர்க்கும் மருந்து ஒன்றுண்டு! அதாவது என்னிடம் மாறாத அன்புடையவர்கள் யாரானாலும் அவர்கள் பாதம்பட்ட மண்ணை நான்  பூசிக்கொண்டால்தான்  என் தலைவலி நீங்கும் ! யார் அவ்வாறு தர விரும்புகிறார்கள் என அறிந்து வாரும். உங்கள் வினாவுக்கான விடை அதில்தான் உள்ளது என்றார்.

மூவுலகமும் சென்றார் நாரதர்! பரந்தாமனின் பாத தூளிகைகளத் தங்கள் தலையில் தரிக்க விரும்பும் பக்தர் கூட்டம், அத்தகைய பாதகச் செயலை யாரால் செய்ய முடியும் எனப் பின் வாங்கியதுஎவருமே முன் வராத நிலையில் இராதையின் முன் சென்று நின்றார் நாரதர்.

நாரதரின் வருகைக்கான காரணத்தைக் கேட்ட இராதை துடித்துப் போனாள்.
உடனே தன் இல்லத்துத் தோட்டதிற்கு ஓடிச்சென்று தான் நின்ற பாததூளிகளை எடுத்து வந்து நாரதரிடம் கொடுத்தாள்! நாரதரே, கண்ணனின் தலைவலி தீருமாயின் எனக்கு எத்தனை பாவங்கள் வந்து குவிந்தாலும் அவற்றை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன். உடனே செல்வீர் எனக் கூறினாள்நாரதர் தன் வினாவுக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் இராதையை வணங்கி, “ ராதே ராதே ராதே கோவிந்தா, “ எனப் பாடலானார்

இந்த பரிபூரண சரணாகதியின் மேன்மையை உணர்த்துவதான சங்குப் பூவுக்குஇராதையின் பிரார்த்தனைஎன்ற பெயர் எத்தனை பொருத்தமாக உள்ளது!


11 Mar 2018

கோடீசுவரர்..

தமிழ் வார, மாத  இதழ்களையெல்லாம் தவறாமல் வாங்கும் காலம் போய் எப்போதாவது வாங்குவது வழக்கமாகிவிட்டது! கல்கி மட்டும் கணிணியிலேயே படித்து விடுகிறேன். சென்ற வாரம் பத்திரிகைகள் விற்கும் கடை வழியே ஒரு பயணம். கடைக்காரருக்கு பண வரவு வரும் நல்ல நாள்!
சட்டென்று உள்ளே நுழைந்து வார, மாத இதழ்கள் இருந்தவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டேன்.

அந்தக் காலத்தில் மருக்கொழுந்து செண்ட் மணக்க வரும் குமுதத்தின் மேல் எனக்கொரு காதல். அண்ணா வாங்கி வருவார். அப்பாவுக்குத் தெரியாமல் ஒளித்து வைக்கப்படும் புத்தகம். தெரிந்தால் செமையாய் திட்டு விழும். ஆனாலும் கட்டுப் பாடுகளைமீறுவதில் ஒரு சுகம்!
இன்று மல்லிகை, பக்தி, துக்ளக்குடன்  குமுதமும்  என் கையில்.
என்ன கமலத்தின் கையில் குமுதமா என சிரிக்கிறாள் மகள்!குமுதம் நன்றாகதான் இருக்கிறது.

சாரு நிவேதிதாவின் கட்டுரை, தமிழச்சி ஆண்டாள், என்ற ப்ரியா கல்யாணராமனின்  சொல்லோவியம், ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன், என நல்லாயிருக்கே என்று சொல்ல வைத்தது குமுதம் லைஃப். இப்பத்திரிகையில் இடம் பெற்ற, எல். மீனாம்பிகா அவர்களின் கல்விக் கடவுளான பிச்சைக்காரர், என்ற செய்தித் தொகுப்பு என் மனதைக் கவர்ந்தது, நெகிழவைத்தது.

அப்படி என்ன புதிதாயுள்ளது? ஒருவன் பாடுபட்டு பணம் சம்பாதித்து சேர்த்து வைக்கிறான். தானும் அனுபவிக்க மாட்டான்! பிறருக்கு என்ன  துன்பம் வந்தாலும் கொடுக்கவும் மாட்டான்! அந்தப் பணத்தால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை ! கஞ்சர்கள் நிறைந்த இவ்வுலகில் பிச்சையெடுத்துக் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு தேவையானவற்றை ஒருவர் வாங்கிக்கொடுக்கிறார் என்றால் அது ஆச்சர்யமானதுதானே?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பக்கத்திலுள்ள ஆலங்கிணறைச் சேர்ந்தவர் பால்பாண்டி. வயது அறுபத்து எட்டு. மனைவி இறந்துவிட்டார். இரு மகள்கள், ஒரு மகன் திருமணமாகி நல்லபடியாக இருக்கிறார்கள். ஏதோ ஒரு சூழலில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். திருச்செந்தூர் கோவிலின் சுற்றில் துண்டுவிரித்துப் படுத்திருந்த இவர், தன் துண்டில் நாணயங்கள் இருப்பதைப் பார்த்தாராம். பிச்சைக்காரன் என்று நினைத்து விட்டார்கள்! நிசமாகவே பிச்சைக்காரனாகிவிட்டார். கோயில் கோயிலாகப் போய் பிச்சையெடுக்க ஆரம்பித்தார்.
சாப்பாட்டுக்குத் தேவையான பணமோ குறைவு! மீதிப் பணத்தை என்ன செய்வது?

அந்தந்த இடங்களிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கிறாராம். இதுவரை பல பள்ளிகளுக்கும் இவர் இவ்வாறு உதவி செய்திருக்கிறார் என்ற செய்தி நிசமாகவே ஆச்சர்யப் படுத்துகிறது அல்லவா?

அரசாங்கத்தை கொள்ளையடிக்கும் கயவர்கள் நிறைந்த இவ்வுலகில் மனிதனுடைய உண்மையான தேவைகள் மிக மிகக் குறைவே என்று உணர்த்துகிறார் இந்தப் பெரியவர்.
அது மட்டுமா, பிறருக்கு உதவுவதற்கு முதுமை தடையல்ல, என நிரூபிக்கும் இளைஞர்!
ஏழ்மையிலும் மனதால் கோடீசுவரராகலாம் என்பதையும் அல்லவா வெளிச்சமிட்டுக்  காண்பிக்கிறார்.
நன்றி- குமுதம் லைஃப்,மீனாம்பிகா அவர்கள்

இனி குமுதம் வாங்குவது என்று தீர்மானித்து விட்டேன்.

நாட்டுப் பற்று

பல ஆண்டுகளுக்கு முன் அந்தமானின் அழகைப் பார்க்க வேண்டுமென்று   நானும் கணவரும் ஒரு பயணம் மேற்கொண்டோம்.
 இயற்கை அழகு மிக்க அந்த ஊர் இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்தது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின்  வன்முறைகளுக்கு பெயர் பெற்றது அந்த மானின் தனிமைச் சிறை.
வங்கத்து இளைஞர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை, சுக போகங்களை விட்டுவிட்டு சுதந்திரத்திற்காகப் போராடி புன்முறுவலோடு அந்தமான் தனிமைச் சிறைசாலையின் அளப்பறிய கொடுமைகளையும் தாங்கிக் கொண்டார்கள்.

குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு, சகல செல்வங்களையும் இழந்து சவார்கர் என்ற இளைஞன் சுதந்திரப் போராட்டத்தில் துணிவோடு இறங்கினான். அவனும் அந்தமானுக்கு அனுப்பப்பட்டான்.  அங்கே அவன் தாங்க வேண்டி வந்த கொடுமைகள் அவனைத் தன்னை மன்னிக்கும்படி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் மன்னிப்புக் கோர வைத்தது என்றால் அவர் பெற்ற தண்டனைகள் எப்படி இருந்திருக்க வேண்டும்?

மன்னிப்பு கேட்டது தவறாம். ஆளாளுக்கு  கேவலப் படுத்துகிறார்கள். ஆனால் அதே பிரிட்டிஷாரிடம் வெட்கமில்லாமல்  இன்றைக்குப் போய் கை கட்டி உத்யோகம் பார்ப்பதை விடவா கேவலம்?

ஆம், பிஜேபி அரசு அவருடைய தியாகங்களைக் கொண்டாடுகிறதாம்.! பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கே சென்று மரியாதை செலுத்துகிறாராம்!

ஒருவர் சொல்கிறார் அந்தமான் சிறைக்குப் போனவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகளாம்! இன்னொருவர் சொல்கிறார் வீரசவார்கர் உண்மையான வீரர் இல்லை, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்டவர்! இதையெல்லாம் படிக்கும் போது புத்திகெட்ட அந்தக் கால  இளைஞர்கள் எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று தோன்றுகிறது.

ஒரே ஒரு நாள் உங்கள் செல்போன், கணினி எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அந்தமான் போங்கள். அங்கு பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கும் சாக்கு மூட்டையால் தைக்கப்பட்ட அரைக்கால் டவுசரையும், மேல் சட்டையையும் போட்டுக் கொண்டு நாள் முழுதும் தேங்காய் உரித்து, செக்கிழுத்து இரவில் அந்த உப்பங்காற்றில்  சாக்கு உடையில் தூங்கப் பாருங்கள்.

அதிக பட்சம் இரண்டு நாள் இருந்து பாருங்கள். பிறகு உயிர்த்தியாகம் செய்தவர்களையெல்லாம்  இழிவு படுத்தும் வேலையைச் செய்யலாம்.

த்தூ!

எங்கே எத்தனைபேர் முன் வருவீர்கள்? இணைய தளத்தில் உட்கார்ந்து கொண்டு குற்றப் பத்திரிகை படித்து தங்கள் அதி புத்திசாலித் தனத்தை விளம்பரப் படுத்திக்கொள்ளாமல் அரை மணி நேரம் இருக்க முடியுமா?

ஒரு நாட்டின் சரித்திரம், படித்து தியாகம் செய்தவர்களை நினைவு கூறத்தான். எல்லாவற்றுக்கும் குற்றம் கண்டு பிடித்து பெருமையோடு அதனை சொல்லுவது தன்னைத் தானே இழிவு படுத்திக்கொள்வதாகும்.

11 Feb 2018

அருட்பாவில் அருவி

அருட்பாவில் அருவி

 நீர் வீழ்ச்சியை அருவி என்னும் அழகு தமிழ்ச் சொல்லால் அலங்கரிக்கிறோம்
தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும்’, என்று  குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்பக் கவிராயர்  குற்றால அருவியின் சிறப்பை
எடுத்துக் கூறுகிறார்குற்றாலத்தின் ஐந்தருவி, தேனருவி இரண்டும் பிரபலமானவை
 கர்நாடக மாநிலத்தின் சிவசமுத்திரம், ‘ஜோக்ஃபால்ஸ்நீர்வீழ்ச்சிகள் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்வனவாம்.
மலையிலிருந்து கீழ் நோக்கிப் பாயும் நீர் முழு வேகத்துடன் வீழ்வதையே நீர்வீழ்ச்சி என்கிறோம்.
அடடா, என்ன திடீரென்று அருவி ஆராய்ச்சி?

நேற்று வள்ளல் பெருமானின் திருவருட்பாவில் இடம் 11பெற்றுள்ளமகாதேவ மாலையின் அழகை நுகர்ந்து கொண்டிருந்தேன். எத்தனை இனிமையான பாடல்கள்!  

நீர்வீழ்ச்சிகளில் மழைக்காலங்களில் அதிக நீர் கொட்டும், மற்ற நாட்களில்  நீர்குறைந்துவிடும்அருவியே ஆனாலும் குறைபாடுடையதுதான்!  

குறையவே குறையாமல் இடைவிடாது ஒரேபோல வழிந்து கொண்டே இருக்கும் அருவியை உங்களுக்குத் தெரியுமா?   
வள்ளல் பெருமான் சொல்கிறார் அப்படி ஓர் அருவியிருக்கிறது என்று! அதுதான் இறைவனுடைய அருளாகிய அருவி

இறைவனுடைய அருளிருந்தால்தான் எதுவுமே நடக்கும்இல்லாவிடில் ஓரணுவும் அசையாது! அவனருள் இருந்தால்தான் அவனை வணங்கமுடியும்

அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள்நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே.
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை
அருளுற முயல்கவென்று அருளிய சிவமே
 -அகவல்

அவனுடைய அருள் தங்கு தடையின்றி வழிந்து ஒழுகும் நீர்வீழ்ச்சி!
நீர் வீழ்ச்சி என்றால் மலை வேண்டாமா
மலையிலிருந்துதானே அருவிகள் தோன்றுகின்றன

மலைகள் கம்பீரமானவை! நம்பிக்கையளிப்பவை! கயிலாய மலையைக் 
கண்டு பரவசமடையாதவர்களும் உண்டோ
பழனி மலையைப் பார்த்து பக்திவசப்படாவதர்கள் யார்?
அருணாசலத்தை வலம் வந்து மனம் நெகிழாதவர் எவர்?

இறைவனோ இயற்கை இன்பம் நிறைந்த, ஓங்கி உயர்ந்த 
ஆனந்த மலையாய் நிற்கிறானாம்! அவனுடைய 
ஆனந்தத்தில்
அருளாகிய அருவி பொங்கிப் பெருகுகிறது
அருள் என்றால் என்ன?
அருள் என்றால் பிற உயிர்களிடம் நாம் காட்டும் இரக்கம், கருணை
அதையே ஜீவகாருண்யம் என்பார் வள்ளல்உடலாலோ, மனதாலோ துன்பப்படும் எவ்வுயிர்க்கும் அத்துன்பம் நீக்குதலே ஜீவகாருண்யம். அதனால்தான் புலால் மறுத்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். எவரிடம் இந்த அருள் உள்ளதோ அவர்களே ஈசனுக்கு நெருங்கியவர்கள்!

இறைவனுடைய இந்த அருளாகிய அருவி பொங்கிப் பெருகி வழிந்து வழிந்து  தங்கு தடையின்றி வெளியே பாய்கிறது! அவனருளாலே அந்த அருளருவியில் நனைந்து அனுபவிக்கும் பேறு பெற்ற வர்கள் யோகிகள்ஆனால் யோகம் செய்யாமலே அருட்பாவைப் படித்து அந்த ஆனந்தத்தை அனுபவிக்கலாம். அந்த ஆனந்தத்தைத் தரும் ஒப்பற்ற திருவருட்பாவாகவும் இறைவன் விளங்குகிறான்.

கருணை நிறைந்து அகமும் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கெல்லாம் களை கணாகிஎன்று காப்புச் செய்யுளிலேயே இயம்புகிறார் வள்ளலார்

அருளருவி வழிந்துவழிந் தொழுக வோங்கும்
ஆனந்தத் தனிமலையே
என்ற இந்த வரிகள் தியானத்திற்கு உரியதாகும்

உள்ளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழுந்தேனாய்விளங்கும் வள்ளலை வள்ளலின் வாய்மொழி அறிந்து இன்புறுவோமாக.

  • வள்ளலார், மகாதேவமாலை, பாடல் 35, அருவி,அருள்,திருவருட்பா
  • 11-2-18,ஞாயிறு