8 Oct 2016

யாசகன்

.நான் யாசகம் கேட்கப் போன நாளில்

வீடுதோறும் சென்று யாசிப்பதற்காக நான் கிராமத்துக்குச் செல்லும் பாதையில்நடந்து கொண்டிருந்தேன்.
ஒரு கனவு போல தங்கரதம் ஒன்று சற்றுத் தொலைவில்
வருவதைக் கண்டேன்.
எந்த அரசர்களுக்கெல்லாம் அரசன் இதில் தோன்றுகிறானோ என
வியந்தேன்.
என்னுடைய நம்பிக்கை சுடர் விட்டது.
ஆகா, என்னுடைய வறுமை தீரும் நாள் வந்துவிட்டது என மகிழ்ந்தேன்.
தங்கத் தேரைச் சுற்றிலும் எழுந்த தூசு முழுதும் செல்வம்
சிதறிக் கிடக்கக் கண்டேன் .
கேளாமலேயே நமக்கு பிச்சை கிடைக்கும் என நம்பினேன்.

என் நம்பிக்கை வீணாகவில்லை.
தேர் என் முன்னால் வந்து நின்றது.
தெய்விகப் புன்னகை மிளிர்ந்த முகத்தின்
பார்வை என் மேல் விழுந்தது.
தாங்கள் இரதத்திலிருந்து கீழே இறங்கினீர்கள்!
இன்றைய நாள் நல்ல நாள் என்று எண்ணினேன்.

ஆனால் எதிர்பாராத ஒன்றுதான் நிகழ்ந்தது!
என் முன்னால் நீண்ட கரங்கள்.....?
எனக்குத்தர உன்னிடம் என்ன இருக்கிறது, என்ற கேள்வி!

மாபெரும் அரசனாகிய தாங்கள்
பிச்சைக்காரனான என்னிடம்
கரங்களை விரித்து யாசிப்பதா?
ஒரு கணம் நான் குழப்பமடைந்தேன்! திகைத்தேன்!
என்ன செய்வது எனத் தெரியாமல் நின்றேன்!
பிறகு என் பையிலிருந்து ஒரு சோளத்தின் மணியை
தங்கள் கரங்களில் வைத்தேன்!

அந்த நாளின் முடிவில் என் பையைத் தரையில் கவிழ்த்தேன்!
என்ன ஆச்சர்யம்!
நான் சேகரித்த சிறுதானியக் குவியலில்
ஒளிவிடும் துண்டுத்தங்கம்.

என் கண்களிலிருந்து கண்ணீர்  பொங்கி வழிகிறது.
உள்ளம் நெகிழ
என்னிடம் உள்ள அனைத்தையும் தங்களுக்கு அர்ப்பணிக்கும்
இதயம் எனக்கு இருக்கவில்லையே என இப்போது
விம்மி விம்மி அழுகிறேன்..

               - இரவீந்திரநாத தாகூரின் கீதாஞ்சலியிலிருந்து

( இறைவன் பூமியில் இறங்கி நமக்கு உதவ வரும் நாளில் எதை அர்ப்பணிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு ஶ்ரீ அன்னையின் பதில்.
பூமிக்கு வரும்போது இறைவனும் யாசகனாகிவிடுகிறான். நாம் கொடுப்பதை
எல்லாம் வாங்கிக் கொள்கிறான்)